தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகில் குலசேகர மங்கலம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி அமல்ராஜ் (54). இவருக்கு வெண்ணியார் (48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதயஜோதி (19) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ராஜலட்சுமி பிளஸ்-2 படித்து விட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக சென்ற 2 வருடங்களாக நீட்தேர்வு எழுதினார். இதில் மாணவி தோல்வியடைந்ததால் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 3-வது முறையாக மீண்டும் நீட்தேர்வு எழுதினார். இந்நிலையில் நீட்தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் நீட்தேர்வுக்கான கீ விடைகளும் இணையதளத்தில் சென்ற 2 நாட்களுக்கு முன் வெளியாகியது. அதன்பின் நீட்தேர்வுக்கான விடைகளை மாணவி ராஜலட்சுமி இணையத்தில் பார்த்தார். அப்போது அவர் தோல்வி அடைந்து விடுவேன் எனவும் தன் மருத்துவகனவு சிதைந்து போனதாகவும் குடும்பத்தினரிடம் கூறி வேதனையடைந்தார். இதனால் மாணவியை பெற்றோர் சமாதானப்படுத்தினர். அதனை தொடர்ந்து ராஜலட்சுமியின் பெற்றோர் வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர்.
இந்நிலையில் வீட்டில் தனியாகயிருந்த ராஜலட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் வீட்டுக்கு திரும்பிவந்த பெற்றோர் தங்களுடைய மகள் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.