ஆன்லைன் செயலிகள் மூலம் பண மோசடி செய்த கும்பலை காவல்துறையினார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் ஆன்லைன் மூலம் கடன் கொடுப்பதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக கூறியிருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அந்த தேடுதல் வேட்டையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குருக்ராம், ஜிதேந்தர் தன்வர், அவருடைய சகோதரி நிஷா, டெல்லியை சேர்ந்த பிரகாஷ் சர்மா ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 19 சிம்கார்டுகள், 7 லேப்டாப்கள் மற்றும் எட்டு செல்போன்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கடன் செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிக்காக உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு மென்பொருள் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் 50 பேர் வேலைபார்த்து உள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளனர். இந்த நிறுவனம் கடன் வழங்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய தகவல்களை கேட்டுக் கொள்வார்கள். அதன்பின் பணத்தை கடனாக கொடுப்பதற்கு முன்பாக வாடிக்கையாளரின் செல்போன்களில் இருக்கும் புகைப்படத்தை ஹேக் செய்து திருடி விடுவார்கள். இதனையடுத்து கடனுக்கு அதிக வட்டி கேட்கும் போது சிலரால் பணத்தை திருப்பி செலுத்த இயலாது.

அந்த சமயத்தில் வாடிக்கையாளர்களின் செல்போனில் இருந்து திருடப்பட்ட புகைப்படங்களை மார்பில் செய்து அவர்களின் நெருக்கமானவர்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்கள். இந்த கடன் மோசடி செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட செயலிகளை வைத்துள்ளார்கள். இந்த பண மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றோம். இந்த மோசடியில் சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த மோசடி கும்பல் கடந்த 3 மாதங்களில் 937 செல்போன் நம்பர் களையும், 200 வங்கி கணக்கையும் பயன்படுத்தியுள்ளனர். அதன் பிறகு போலியான கடன் செயலிகளை முடக்குவதற்கு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 37 செயலிகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த கடன் செயலிகளால் நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு சுமார் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதால், பொதுமக்கள் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் 200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 5.46 கோடி ரூபாயை மோசடி செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பதும், 15.86 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இவரிடமிருந்து 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 15 அசையா சொத்துக்கள் மற்றும் 13 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. அதோடு பண மோசடியில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமலாக்கத்துறையிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மோசடி வழக்கில் சிறப்பாக பணியாற்றிய சைபர் கிரைம் காவல் ஆணையர் கிரண் ஜோதி தலைமையிலான காவலர்களை பாராட்டி சங்கர் ஜிவால் சான்றிதழ்களை வழங்கினார்.
