கொலை முயற்சியிலிருந்து அர்ஜெண்டினாவின் துணை அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்குவது அர்ஜெண்டினா. இதன் துணை ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் என்ற பெண் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மறுத்து வருகிறார். குறிப்பாக அடுத்த மாதம் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சுமார் 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர் மீதான வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு கிறிஸ்டினா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்து விட்டு புவெனோஸ் அய்ரோஸ் நகரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்துள்ளார். அங்கு அவருடைய நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் நெற்றி மீது துப்பாத்தியை வைத்து சுட முயன்றுள்ளான்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. இதனால் உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதில் ஐந்து தோட்டாக்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை முயற்சியில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் அந்த நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அர்ஜெண்டினாவின் அதிபரான அல்பர்டோ பெர்னான்டஸ் கூறியதாவது “அர்ஜெண்டினா ராணுவ ஆட்சியில் இருந்து கடந்த 1983ல் விடுதலை அடைந்தது. அதன் பிறகு அங்கு நடந்த மிக மோசமான சம்பவம் இந்த கொலை முயற்சியே ஆகும்” என தெரிவித்துள்ளார்.