தான் இறந்து விட்டதாக இணையத்தில் செய்தி பரவி வந்த நிலையில் நடிகர் சுமன் மறுத்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உருவாவதற்கு முன்பாகவே அவருடன் இணைந்து நடித்த நடிகர் சுமன். இவர் சென்ற 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகின்றார். இவர் சிவாஜி, குருவி, ஏகன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அண்மையில் வெளியான லெஜண்ட் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கின்றார்.
இவர் இடையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் சென்ற 2007 ஆம் வருடம் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ரிலீசான சிவாஜி திரைப்படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைபடத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் சில youtube சேனல்களில் இவர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து சுமன் இந்த வதந்தியை மறுத்திருக்கின்றார். இதற்கு அவர் கூறியுள்ளதாவது, நான் நன்றாக இருக்கின்றேன். யாரும் பொய்யான தகவலை நம்ப வேண்டாம். மேலும் இது போன்ற பொய்யான தகவல் பரப்புவோர் மீது வழக்கு தொடர உள்ளேன் என கூறியுள்ளார்.