மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றேன். இந்த நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் தற்போது எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் போன்றறோரை நான் துன்புறுத்துவதாக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்திருக்கின்றனர். அதன் பேரில் தற்போது நான் வசித்து வரும் வீட்டில் இருந்து போலீசாரின் உதவியுடன் என்னை வெளியேற்றி அந்த வீட்டை எனது மாமனார் மாமியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரி உத்தரவிட்டிருக்கிறார்.
இதனால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த மனு ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி மனுதாரருக்கு எதிராக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரி பிறப்பித்த உத்தரவு சட்டம் விரோதமானது. மேலும் மனுதாரருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடியுள்ளார். விசாரணையின் முடிவில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் படி மூத்த குடிமக்களான மனுதாரரின் மாமனார் மாமியாருக்கு அவர் நேரடியான உறவோ அல்லது வாரிசு கிடையாது. அதனால் இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது எனவே மனுதாரருக்கு எதிரான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.