திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவை வசித்து வருபவர் ரவி. இவரது மகள் துளசிக்கு (28) சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்த குப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பூமிகா என்ற மகளும், ஜெகன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவர் தினசரி மதுகுடித்து விட்டு வந்து சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதால் 5½ வருடங்களுக்கு முன் துளசி அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அதன்பின் 2018 வருடம் முதல் துளசி சுங்குவார்சத்திரத்திலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். அதனை தொடர்ந்து அங்கு என்ஜினீயராக வேலைபார்த்து வந்த பள்ளிப்பட்டு அருகில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த முகேஷ் (28) என்பவரை துளசி காதலித்து கடந்த 2021-ம் ஆண்டு நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து காட்பாடியில் தனிக்குடித்தனம் இருந்தார். திருமணம் செய்ததை தன் குடும்பத்தினர் விரும்பவில்லை எனக்கூறி முகேஷ் அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டார்.
பின் பல முறை போன் செய்தும் முகேஷ் மற்றும் அவரது பெற்றோர் சரியான பதில் கூறவில்லை. இதனால் துளசி நேற்று முன்தினம் முகேஷ் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் சென்றார். அதன்பின் அவரது வீட்டு முன் துளசி தன்னுடய உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.