ஹொக்கி கனடாவின் தலைமையின் மீது பெடரல் அரசு மற்றும் கனேடிய மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதனை உணர்ந்து கொள்ள நிர்வாகிகள் தரப்பானது தாமதிக்கும் எனில், அது மேலதிக சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஹொக்கி கனடாவின் இயக்குநர்கள் குழு இவ்வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவற்றில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஸ்மித், அவரது நிர்வாகக் குழுவை ஆதரிப்பதாகக் கூறியிருந்தது.
ஹொக்கி கனடா அமைப்பின் தலைமையை மாற்றுவதற்குரிய கோரிக்கைகள் இருந்த போதிலும் ஹொக்கி கனடாவின் இயக்குநர்கள் குழு குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்நிலையிலேயே அரசும் கனேடிய மக்களும் நம்பிக்கை இழந்து விட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஹொக்கி கனடா அமைப்பு 2003 மற்றும் 2018 உலக ஜூனியர் அணிகளின் வீரர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன் கொடுமை குற்றச்சாட்டுகளை கையாண்டதற்காக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அத்துடன் இவ்விவகாரத்தில் இது 2வது முறையாக பிரதமர் ட்ரூடோ கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.