தமிழகத்தில் நெகிழிப்பொருள்கள் தடை உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீா்ப்பை மறு ஆய்வு மேற்கொள்ள கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா போன்றோர் அடங்கிய அமா்வில் விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையா் தரப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றில் “உணவுப் பாதுகாப்பு விதிகளில் ஆவின்பால் மற்றும் அதுசார்ந்த பொருள்களை கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள், அலுமினியம் பாயில்களில் அடைத்து விற்க அனுமதிக்கிறது. ஆகவே ஆவின் நிறுவனம் நெகிழிப்பைகளை பயன்படுத்துகிறது. குடிநீா் பாட்டில்கள் பயன்பாட்டை தவிா்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் குடிநீா் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம். அத்துடன் தடைசெய்யப்பட்ட நெகிழிகளைப் பயன்படுத்தியதற்காக ரூபாய். 33.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தியதாக உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், குடிநீா் உற்பத்தி நிறுவனங்கள் மீது 384 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 27.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் 363 உரிமையியல் வழக்குகளில் ரூபாய். 54.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்களுக்கு எதிராக 13 குற்றவழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூபாய் 1.79 லட்சம் அபராதமும், 492 உரிமையியல் வழக்குகளில் ரூபாய்.61.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.