பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.
படியில் பயணம் நொடியில் மரணம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மதிப்பதே கிடையாது. இந்த படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவர்கள் பேருந்து எடுக்கும் போது ஓடி சென்று ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்ற உயிருக்கு ஆபத்தான பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் பேருந்து பற்றாக்குறை காரணமாகவும் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் பிரபாகரன் என்ற மாணவன் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்ததால், மதுரை மாவட்ட துணை டிஎஸ்பி ஆறுமுகசாமி உத்தரவின் பேரில் மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாவடி பகுதியில் பேருந்தின் படிக்கட்டுகளில் சில மாணவர்கள் தொங்கியபடி சென்றனர். இந்த பேருந்தை நிறுத்திய காவல்துறையினர் மாணவர்களை கீழே இறங்குமாறு கூறி படிக்கட்டில் நின்று செல்வதால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி கூறி அறிவுரை வழங்கினர்.
அதோடு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகளை படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கும்படி காவல் துறையினர் கூறினர். மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை உடனடியாக கீழே இறக்கி விட வேண்டும் என்றும், அவ்வாறு இறங்க மறுத்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் எனவும் கூறினர்.