பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்..
கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணி களம் இறங்கி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 33* ரன்களுடன் கடைசி வரை நின்று அடித்து வெற்றி தேடி கொடுத்தார்.. மேலும் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் 35 ரன்கள் எடுத்திருந்தனர்.
இந்த போட்டி குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் விமர்சனம் செய்துள்ளார்.. இது குறித்து அவர் பேசியதாவது, இரு அணிகளுமே மிகவும் மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்காக ஆடவில்லை. தோல்வி அடைய வேண்டும் என்று ஆடினர். இரண்டு அணிகளின் கேப்டன்களும் வித்தியாசமான முடிவை எடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா எதற்காக ரிஷப் பண்டை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கை கொண்டு வந்தார் என்று தெரியவில்லை.
அதேபோல பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இப்திகார் அகமதை எதற்காக 4ஆவது இடத்தில் ஆட வைத்தார் என்றும் எனக்கு புரியவில்லை. மேலும் இந்தியா பேட்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவுக்கு முன்னதாகவே ஜடேஜாவை ரோகித் சர்மா களம் இறக்கி விட்டது குறித்தும் எனக்கு சரியான தெளிவு கிடைக்கவில்லை. இப்படி இரு அணிகளுமே பல தவறுகளை செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இரண்டு அணிகளுமே தோல்விக்காகத் தான் விளையாடி உள்ளனர். இதுதான் மிகவும் மோசமான போட்டி என்று கடுமையாக விமர்சித்தார்..