ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி, யுவராஜ் சிங் சாதனையை ஹர்திக் பாண்டியா தகர்த்துள்ளார்..
கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி களம் இறங்கி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 33* ரன்களுடன் கடைசி வரை நின்று அடித்து வெற்றி தேடி கொடுத்தார்.. மேலும் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் 35 ரன்கள் எடுத்திருந்தனர்.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா தான். இந்திய அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் திணறியது. அப்போது ஜடேஜா – ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர்.. அவசரப்படாமல் அதிகளவில் 2 ரன்கள் ஓடி எடுத்து கடைசி வரை போட்டியை கொண்டு சென்றனர்.. இறுதியில் 2 ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட, 19 ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள் அடித்தது உட்பட 14 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் முதல் பந்தில் ஜடஜா சிக்ஸர் அடிக்க முற்பட்டு போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் சிங்கள் எடுத்துக் கொடுக்க, பின்னர் ஸ்ட்ரைக்குக்கு வந்த ஹர்திக் பாண்டியா 3ஆவது பந்தில் ரன் எடுக்காததால் டாட் பாலானது. பின்னர் 4ஆவது பந்தில் அற்புதமாக சிக்சர் அடிக்க மைதானமே ஆர்ப்பரித்து வெற்றியை கொண்டாடியது. ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தது மட்டும் இல்லாமல் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்ததால் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி கடைசி வரை நின்று தோனி போலவே பினிஷ் செய்ததாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் முக்கிய சாதனைகளை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரே போட்டியில் 30க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் இந்திய வீரர் யுவராஜ் சிங் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்துள்ளார். அதாவது யுவராஜ் சிங் 2 முறை 30க்கும் மேல் ரன்களை அடித்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.. ஆனால் ஹர்திக் இந்த போட்டியின் மூலம் 3 முறை 30க்கும் மேல் ரன்களை எடுத்து 3 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தார்.
அது மட்டும் இல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 16 முதல் 20 ஓவர்களில் அதிக சிக்ஸர் விளாசியவர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருந்தார். ஆனால் இந்த போட்டியில் கடைசியில் அடித்த சிக்ஸரால் ஹர்திக் பாண்டியா 34 சிக்சருடன் தோனியின் சாதனையை சமன் செய்தார்..
ஹர்திக் பாண்டியா – 34
எம்எஸ் தோனி – 34
யுவராஜ் சிங் – 31
விராட் கோலி – 27