இந்தியா தங்கள் நாட்டிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று ரஷ்யா கண்டித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யநாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்தன. இந்த பிரச்சனையில் இந்தியா நடுநிலையாக இருந்து வந்தது. மேலும் ரஷ்ய நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயையும் கொள்முதல் செய்தது.
இதனால் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை கண்டித்தன. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான ரஷ்ய தூதராக இருக்கும் டெனிஸ் அலிபோவ் தெரிவித்ததாவது, கச்சா எண்ணெயை குறைவான விலையில் ரஷ்யா விற்பனை செய்தது. எனவே, இந்தியா சமீப காலங்களாக அங்கிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.
இதனை மேற்கத்திய நாடுகள் எதிர்க்கின்றன. ரஷ்ய நாட்டின் மீது அந்நாடுகள் சட்டவிரோதமான முறையில் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. அதற்கு மாறாக எரிபொருளையும் தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும்போது இந்தியாவை மட்டும் எதிர்ப்பது அந்நாடுகளின் இரட்டை வேடம் மற்றும் கொள்கை இல்லாத நிலைப்பாட்டை காண்பிக்கிறது என்று கூறியிருக்கிறார்.