தமிழகத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினசரி ஒரு திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புது ட்ரெண்டிங் ஆக செல்போன் கோபுரத்தை நூதனம் முறையில் ,மர்ம கும்பல் ஒன்று திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பலலட்சம் ரூபாய் மதிப்புள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு செல்போன் கோபுரத்தைசென்ற ஜூலை மாதம் 27ஆம் தேதி போலி ஆவணங்களை காண்பித்து மர்ம கும்பல் ராட்சத கிரேன் எந்திரங்களை பயன்படுத்தி கழற்றி கடத்தி சென்றனர். இது தொடர்பாக தகவலறிந்த சென்னையை சேர்ந்த தனியார்நிறுவன மேலாளர் தமிழரசன், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரத்தை திருடிச் சென்ற மர்மகும்பலை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்படி காவல்துறையினர் விசாரித்து சென்ற 26-ஆம் தேதி வழக்குப்பதிவு வந்தனர்.
இந்த திருட்டில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு கைது செய்து செல்போன் கோபுரத்தை மீட்டு கொடுக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்வேதா, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபால், உதயக்குமார் போன்றோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் கோபுரத்தை தூத்துக்குடி ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (33), நெல்லை நாங்குநேரி ஏமன்குளம் பகுதியை சேர்ந்த நாகமுத்து (35), வாழப்பாடி காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ராகேஷ் சர்மா (38) ஆகிய 3 பேரும் திருடி ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த தனிப்படை காவல்துறையினர், ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் எடை மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியில் திருடப்பட்ட செல்போன் கோபுரத்தின் பாகங்களை பறிமுதல் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் மடிக்கணினி, ஜெனரேட்டர் சுமார் 10 டன் எடையுள்ள இரும்பு தளவாடபொருட்கள் என ரூபாய்.6 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா?.. என்பது குறித்தும் மீட்கப்படாத மற்ற உதிரி பாகங்கள் பற்றியும் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தை போன்றே ஒரு கும்பல் உள்ளூர் புள்ளிகளின் உதவியுடன் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் பல பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செயல்படாத பெரும்பாலான செல்போன் கோபுரங்களை நூதன முறையில் திருடியுள்ளது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் சென்னை, ராணிப்பேட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், திருப்பத்தூர் மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதே பாணியில் செல்போன் கோபுரம் திருடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.