சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கெங்கைசூடாமணி பகுதியில் சாந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் இந்த பள்ளியின் தாளாளராக இருக்கிறார். இவரும் இவரது கணவருமான காமராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து பள்ளியை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் 4 1/2 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடித்து வீட்டுக்கு சென்ற உடல் வலிப்பதாக அழுதுள்ளார். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை சிறிது நாட்கள் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த மாணவி மீண்டும் வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் வலிப்பதாக கதறி அழுதுள்ளார்.
மேலும் மாணவியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மாணவியை வேலூரில் அமைந்துள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியர் காமராஜ் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளியின் முன்பு 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட காமராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.