தமிழகம் முழுதும் பெரும்பாலான பகுதிகளில் செல்போன் டவர்களை மர்ம கும்பல் திருடியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வருடங்களுக்கு முன்பு நாடு முழுதும் செல்போன்கள் செயல்படுவதற்கு அனைத்து பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான ராட்சத டவர்களை அமைத்தது. தமிழகத்தில் பல தனியார் செல்போன் நிறுவனங்கள் அமைத்த 100-க்கும் அதிகமான டவர்கள் இப்போது செயல்பாடற்று காணப்படுகிறது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெரும்பாலான செல்போன் டவர்கள் இருக்கிறது. இதில் சேலம் வாழப்பாடி அருகில் மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்புள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு செல்போன் டவரை, மர்மகும்பல் போலி ஆவணங்களை காண்பித்து சென்ற ஜூலைமாத இறுதியில் ராட்சத கிரேன் இயந்திரங்களைக் கொண்டு கழற்றி கடத்திச் சென்று விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவலறிந்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான செல்போன்டவர் மாயமானதாகவும் அதை திருடிச்சென்ற மர்மகும்பலை கண்டறிந்த மீட்டுகொடுக்க வேண்டுமெனவும் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தது. இந்த நிறுவனத்தின் சேலம் மேலாளரான தமிழரசன் என்பவர் கொடுத்த புகாரின்படி ரூபாய். 25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்மகும்பல் திருடிச் சென்றதாக கடந்த 26ம் தேதி வாழப்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பல் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவரை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவ்வாறு வாழப்பாடி அருகில் பலலட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் மாயமானதாக தனியார் நிறுவனம் கொடுத்துள்ள புகார் குறித்து தகவல் பரவியதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திருட்டு கும்பல் உள்ளூர் புள்ளிகள் உதவியுடன், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழக முழுதும் பல பகுதியிலிருந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பெரும்பாலான செல்போன் டவர்களை திருடியுள்ளதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருட்டு கும்பலைப் பிடித்து உரிய விசாரணை மேற்கொண்டால் தமிழகம் முழுதும் நடந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நூதன செல்போன் டவர் திருட்டு பற்றி பல சம்பவங்கள் வெளிவரும். மேலும் இதுகுறித்து தனிப்படை அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தனியார் நிறுவனத்தினர் மற்றும் டவர் அமைக்க நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.