இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதியில் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் திடீரென கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் இளையான்குடி, கண்மாய்க்கரை, வாள்மேல் நடந்த அம்மன் கோவில் பகுதி, பஜார் பகுதி, சாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
இது போலவே காரைக்குடி நகர் பகுதியில் காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் மதியம் 2 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்து. பின் கனமழை பெய்தது. இந்த மழையானது அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்ததால் பல பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் குளுமையான நிலை நீடித்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.