Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக சென்ற பெண்…. தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!!!

பிரசவத்திற்காக சென்ற பெண்மணிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மீன்பிடி தொழிலாளியான அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா ஹெலன் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு பிரசவத்திற்காக இளங்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு இந்திராவுக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திடீரென இந்திராவுக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததால் அவருடைய கர்ப்பப்பை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கர்ப்பப்பை எடுக்கப்பட்ட பிறகு இந்திராவின் உடல்நிலை மோசமானதால் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல மாதங்களாக இந்திரா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இந்திரா தனக்கு பிரசவத்தின் போது உரிய முறையில் சிகிச்சை வழங்காத தனியார் மருத்துவமனையின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் ரூ. 19.50 லட்சம் நஷ்ட ஈடு வேண்டுமென்று கூறி கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தனியார் மருத்துவமனை ரூபாய் 9 லட்சம் அபராதம் வழங்க வேண்டும் என கூறினார்.

இந்த அபராத தொகைக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 6 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் கூறினார். அதோடு இந்திரா சிகிச்சைக்காக செலவு செய்த ரூ. 7.21 லட்சம் மற்றும் வழக்குக்காக செலவு செய்த ரூபாய் 20 ஆயிரம் ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். இந்தத் தொகையை 4 மாதங்களுக்குள் வழங்காவிட்டால் அதற்கான வட்டியையும் சேர்த்து மருத்துவமனை வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |