Categories
மாநில செய்திகள்

தூதரகம் மூலம் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி..!

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் “டைமண்ட் பிரின்சஸ்” என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். அதில் 162 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பு அரசியல் கட்சிகள், பொது மக்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் அளித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் தெரிவித்திருந்தார். வைரஸ் தொற்று அபாயம் உள்ளதால் கப்பலில் உள்ள பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர், “அமைச்சருக்கு நன்றி, இந்திய தூதரக அலுவலர்கள் குழு, பயணிகளுக்கான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் தகவல்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |