4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த புஷ்பா, ஜோதிகா, ரமணியம்மாள், சௌந்தர்யா ஆகிய நான்கு பேர் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் 4 மாணவிகளும் சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி நிர்வாகியிடம் கூறியுள்ளனர். ஆனால் நான்கு மாணவிகளும் கொட்டைபுத்தூரில் இருக்கும் தோழியின் வீட்டிற்கு சென்று மறுநாள் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து மாணவிகள் 4 பேரும் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் மாணவிகளை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவிகள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விடுதியில் வைத்து எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகளும் விடுதி சமையலர் சத்தியமாளும் இணைந்து மாணவிகளை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மாணவிகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோர் மாணவிகளை நேரில் சந்தித்து அறிவுரை கூறியுள்ளனர். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது, மாணவர்- மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். எனவே பள்ளிக்கூடங்களில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.