ஒரு நாளைக்கு நான் 100 முதல் 150 சிக்சர் வரை அடித்து பயிற்சி எடுத்து வருகிறேன் என்று பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடை பெற இருக்கும் நிலையில், முன்னதாக வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. அதன் பின் அடுத்த நாளான 28ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோத இருக்கிறது.
இந்த இரு அணிகளும் போதும் ஆட்டம் உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. எனவே அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த ஆசியக் கோப்பையில் களமிறங்க இருக்கிறது இந்திய அணி.. இந்த இரு நாட்டு அணி வீரர்களும் இந்த கிரிக்கெட் போருக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த அதிரடி வீரர் ஆசிப் அலி ஒரு நாளைக்கு நான் 100 முதல் 150 சிக்சர் வரை அடித்து பயிற்சி எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தினமும் நான் 100 சிக்ஸர்கள் முதல் 150 சிக்ஸர்கள் வரை அடித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். இப்படி பயிற்சி எடுத்தால் தான் என்னால் போட்டியின் போது 5 சிக்ஸர்கள் வரை மிக எளிதாக அடிக்க முடியும்.
டி 20 கிரிக்கெட்டில் பின் வரிசையில் நான் ஆட வரும்போது ஓவருக்கு கட்டாயம் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்குவேன். இது போன்ற இக்கட்டான பிரசரான சமயத்தில் ஆடுவது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னால் பந்தின் லைன் மற்றும் லென்த்தை சரியாக கனித்து சிக்ஸர்களை அடிக்க முடியும் என்றாலும் கூட ஒரே மாதிரியாக ஆடினால் பவுலர்கள் எளிதாக சுதாரித்துக் கொள்வார்கள். எனவே தான் வெவ்வேறு வகையான ஷாட்டுகளையும் ஆட்ட முயற்சி எடுத்து வருகிறேன். என்னுடைய சிறப்பான ஆட்டம் இந்த ஆசிய கோப்பையில் வெளிவருவது நிச்சயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.