செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எடப்பாடி தரப்பு ஆதரவாளர் கே.பி முனுசாமி, அண்ணா திமுக ஒரே தரப்பு தான். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களுடைய கழகத்தினுடைய தலைவர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழகத்தினுடைய முன்னணி தலைவர்கள் அமர்ந்து ஆலோசனை செய்து அதற்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும். இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறோம், அந்த மேல்முறையீட்டின் வாயிலாக எந்த விதமான தீர்ப்பு வருகிறதோ, அதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை நாங்கள் எடுப்போம்.
ஏற்கனவே நான் கூறியது போல எங்களை அழைப்பதற்கு தார்மீக உரிமை அவருக்கு இல்லை என்று நான் கூறினேன். அடுத்ததாக நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் அரசியலில் இருப்பதற்கே எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை என்று கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன். காரணம் ஒரு மனிதன் ஒரு கொள்கையின் அடிப்படையில் செல்கிறார் என்று சொன்னால், அந்த கொள்கையின் வாயிலாக மக்களிடத்திலே பிரகடனம் செய்கிறார்.
திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் புரட்சித்தலைவி மறைவுக்குப் பின்பாக, திருமதி சசிகலா அம்மையாரை, அவருடைய குடும்பத்தை எந்த சூழ்நிலையிலும் இந்த கட்சியில் சேர்த்து விடக்கூடாது. ஏனென்றால் இந்த கட்சியை அபகரித்து விடுவார்கள், நான் உயிருள்ள வரை இவர்களை சேர்க்க விட மாட்டேன். அதேபோல டிடிவி தினகரன் ஒரு மாயமான், அந்த மாயமானை பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவர் எந்த சூழ்நிலையிலும் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறிய ஓபிஎஸ், கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களுக்கு உள்ளாகவே அவர் மனநிலை மாறுகிறது என்று சொன்னால், அதற்கு என்ன காரணம்.
உண்மையாகவே அரசியல் கொள்கையோடு இல்லை, உண்மையாகவே ஒரு தலைவரை தலைவராக ஏற்றுக்கொண்டு, அந்த தலைவரின் கீழ் பணியாற்றக்கூடிய தொண்டராக இல்லை. அனைத்துமே தன்னுடைய சுயநலத்திற்காக தான் இந்த கட்சியின் பயன்படுத்தி இருக்கிறார், கட்சியின் தலைமையும் பயன்படுத்தி இருக்கிறார். சசிகலா அம்மையாரையும் பயன்படுத்தி இருக்கிறார், அதே சசிகலா அம்மையார வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார், இன்று அதே சசிகலா அம்மையாரை வேண்டும் என்று சொல்கிறார் என்றால் இவருடைய சுயநலம் மிக வெட்ட வெளிச்சமாக இவரே நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார் என்பது தான் பொருள்.