கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மகேந்திரன் (50) என்பவரை தன் வீட்டில் மண் எடுக்கும் பணிக்காகவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகவும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் முத்துக்குமாருக்கும், மகேந்திரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மகேந்திரன், முத்துக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முத்துக்குமார் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகேந்திரனை தலை மற்றும் கையில் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் கீழே சரிந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் வால்பாறை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகேந்திரனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திரனை வெட்டிய முத்துக்குமார் கையில் அரிவாளுடன் வந்து வால்பாறை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இச்ம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.