சிறப்பாக நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சின்னம்பேடு பகுதியில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மயூரநாதர், அருணாச்சலேஸ்வரர், அருணகிரிநாதர், கால பைரவர், நவக்கிரகங்கள், ஆதிமூலர், நாகர், சண்டிகேஸ்வரர், சூரியனார், அபித குஜலாம்பாள், ராஜகணபதி ஆகியோருக்கு தனி சன்னிதிகள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா கடந்த 17-ம் தேதி கணபதி ஹோமத்துடன் சிறப்பாக தொடங்கியது.
இந்நிலையில் நேற்று யாகசாலை பூஜை முடிந்ததும் கோவில் குருக்கள் யாகசாலையில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்து வந்து கோவில் கோபுரத்தில் நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனையடுத்து மூலவரான முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில் அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், துரை சந்திரசேகர் எம்எல்ஏ, வி.ஜி ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.ஜே கோவிந்தராஜன் எம்எல்ஏ, அமைச்சர் நாசர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய இணை மந்திரி எல். முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.