தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்தது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்று பெற்றது. மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்தது.
இந்த இழப்பை ஈடு செய்யும் விதமாக அரசு போக்குவரத்து துறைக்கு இழப்பீடு தொகையை அளித்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை அரசு உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது போக்குவரத்து துறையில் புதிய வாகனங்களை பதிவு செய்தல், பேன்சி நம்பர் வாங்குவதற்கு மற்றும் ஓட்டுநர் உரிமம் , எல்.எல்.ஆர் போன்றவை வாங்குவதற்கு தனியாக சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணங்களால் போக்குவரத்து துறைக்கு 2021-22-ம் நிதியாண்டில் ரூ.5,271.9 வருவாய் கிட்டியுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலையில் இத்தகைய வருவாய் போதாது என்பதால் சேவை கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணம் 10 மடங்கு வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருத்தப்பட்ட கட்டணம் எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறித்து பொதுமக்களுக்கு இந்த மாத இறுதியில் தெரிவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.