பொதுமக்களின் உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனித பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றி பாதுகாக்க வேண்டும் என்றால் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற வேண்டும் என்றால் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் தரவான உணவையும் பாதுகாக்கப்பட்ட குடிநீரும் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆனால் தற்போது உணவு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கிராமப்புறங்களில் இருந்தும் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறு வருபவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் இருக்கின்றார்கள். இதனால் உணவகங்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகின்றது. பெரும்பாலான சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறையின் ஆய்வு சோதனை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மிகப்பெரிய உணவகங்களில் கூட சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததையும், துர்நாற்றம் வீசும் அளவில் இருந்ததையும், உணவுப் பொருட்களில் புழு பூச்சி போன்றவை இருந்ததையும் தரம் மிகவும் குறைவாக இருந்ததையும் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி வைக்கப்பட்டிருந்ததையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரசாயனங்களைக் கொண்டு பளபளப்பாக மாற்றப்படுவதாகவும், அப்பளத்தில் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றது. இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சுகாதாரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என கூறி வருகின்றார்கள்.
தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து உணவகங்களிலும் காலம் முறை ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இல்லையென்றால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதன் மூலமாக மருத்துவத்துறை மிகப்பெரிய சவாலை சந்திக்க நேரிடும் அதனால் வருமுன் காப்போம் என்பதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் என பல்வேறு நோய்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தரம் அற்ற உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருவதால் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஆரோக்கிய மற்ற சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும். அதனால் இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. எனவே முதல்வர் அவர்கள் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி உணவகங்களின் எண்ணிக்கைகேற்ப உணவு பாதுகாப்புத்துறையினை மேம்படுத்தி காலம் முறை ஆய்வுகளின் மேற்கொண்டு இனி வருங்காலங்களில் அனைவரும் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.