ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதை அடுத்து Gpay, Phonepe போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப் பணம் செலுத்துவதற்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் Gpay, Phonepe பணப் பரிவர்த்தனை செயலிகளுக்குக் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ATMல் நமது சேமிப்பு பணத்தை எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதைப் போன்று Gpay, Phonepe போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னணு நிதி பரிமாற்றத்திற்கான உள்கட்டமைப்பிற்கான முதலீட்டை மீட்டெடுக்கும் நோக்கில் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகவும், இதுதொடர்பாக மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, பொதுமக்களின் தினசரி வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.