இன்று முதல் நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது நடைபெறுகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது திருச்சி இராணுவ ஆள்சேர்ப்பு மையம் சார்பாக இன்று முதல் நடைபெறுகின்றது. இதில் பதினேழு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு 33,000-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமானது இன்று அதிகாலையில் இருந்து நடைபெறுகின்றது. இதனால் அரங்கை இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் விளையாட்டு அரங்கம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. தினமும் 3,000 பேருக்கு நேர்முகத் தேர்வை நடத்த ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்ற 18ஆம் தேதி ஆட்களை தேர்வு செய்ய 140 ராணுவ வீரர்கள் நாகர்கோவிலுக்கு வந்தடைந்தனர்.