ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவி தார் இன்று தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் வருடம் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரம் ஒன்றிற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.
மேலும் பல இடங்களில் இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. நகரங்களுக்கு சிறப்பு வசதிகளை கொடுக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் இதன் மூலம் சிக்கலும் உருவாகியுள்ளது. உதாரணமாக சென்னை தி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்ட பின் தான் மழைக்காலங்களில் நீர் அதிக அளவில் தேங்குவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தி நகரில் நடைபெற்ற பணிகளில் தரம் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் கோடிக்கணக்கான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து இது பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் அமைத்துள்ளார். இந்த ஊழல் தொடர்பான விசாரணையை நடத்தி மூன்று மாதத்திற்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த விசாரணை அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து இது தொடர்பான விசாரணையும் தீவிரம் அடையும் என கூறுகின்றார்கள். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.