இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு யுபிஐ சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாறாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐயை மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. இதை பயன்படுத்த பயனாளர்களுக்கு எந்த கட்டணமும் வசூல் செய்வது கிடையாது.
இதனால் இந்த சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டணம் இல்லாத யுபிஐ சேவை என்ற விதியில் புதிய மாற்றம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா ரிசர்வ் வங்கி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கருத்து கேட்பு நடத்தி வருகின்றது. இது பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழிவில் கூறியதாவது: “யுபிஐ என்பது ஐஎம்பிஎஸ் போன்றது. எனவே, ஐஎம்பிஎஸ் இல் உள்ள கட்டணங்களைப் போலவே யுபிஐ பணப்பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் இருக்க வேண்டும். வெவ்வேறு தொகை வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கட்டணம் விதிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.