தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களில் நம்பர் பிளேட்டின்றி ஓட்டும் நபர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதாவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யயும் வாகனங்களில் நம்பர் பிளேட்டின்றி ஓட்டுகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு, பைக் சாகசங்களை மேற்கொள்கின்றனர். அத்துடன் போலி நம்பர் பிளேட்களையும் சிலர் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தவறு செய்த நபர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை. மேலும், இது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களிடையே புகார்கள் பெறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நம்பர் பிளேட் இல்லாமல் அதிக வாகனங்கள் ஓடுவதாக வந்த தகவலின் பேரில் 3 நாட்களாக சோதனை நடந்தது. இந்த 3 நாட்களில் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட்டின்றி யாரேனும் வாகனங்கள் ஓட்டுவது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.