டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது.
குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் அந்த 39 பேர் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டு , புதிதாக 39 பேர் யாரெல்லாம் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து விரைவாக கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிப். 19ஆம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருக்கிறது.
அதற்கான அழைப்பு கடிதத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது . இதில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.