சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் பார்த்தசாரதி. இவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர், வண்ணாரப்பேட்டை பகுதியில் தமது வீட்டிலேயே சிறிய அளவிலான மருத்துவமனை அமைத்துள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். அதன்பின் கால மாற்றத்திற்கு ஏற்ப மிக குறைந்த அளவிலான கட்டணத்திலேயே மருத்துவ சேவையை தொடர்ந்துள்ளார்.
அவர் அதிகம் கட்டணம் வாங்கியதே 50 ரூபாய்தான். இவர் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கெல்லாம் சென்று மருத்துவம் படித்து வந்தவர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறை மக்களுக்கு சேவை புரிந்து வந்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு வசதியாக ஆரம்ப காலத்தில் அவர் நிர்ணயித்த மருத்துவக் கட்டணம் தான் 60 பைசா. அதனாலேயே அவர் 60 பைசா டாக்டர் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டுள்ளார். நாளடைவில் கால மாற்றத்திற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தினாலும் பணம் இல்லாதவர்களுக்கு எதையும் கேட்காமல் மருத்துவம் அளிக்க தொடங்கியுள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் 2 ரூபாய், அதன்பின் 3 ரூபாயில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். பின்னர், 5 ரூபாய்க்கும் சிகிச்சை அளித்துள்ளார். பள்ளி சீருடையில் செல்லும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்துள்ளார். மேலும் இவர் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் என்பதால் வடசென்னையில் உள்ள பெரும்பாலானோர் அவரிடம் சிகிச்சைக்காக வந்து செல்வர். ஏழை எளிய மக்களுக்கு பணம் வாங்காமல் இலவசமாகவும் சிகிச்சையளித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா நோயாளிகள் பலருக்கும் சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளார். இவரை போன்றதொரு மருத்துவரை காண்பது எளிதன்றோ.