பரம்பிக்குளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக பொதுப்பணி துறையால் தண்ணீர் திறத்தல், அணையை பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணை மொத்த கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில் காண்டூர் கால்வாயில் உள்ள நல்லாறு பகுதியில் ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது பரம்பிக்குளம் அணையிலிருந்து சுரங்க பாதை வழியாக சர்க்கார் பதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, 12 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு, காட்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 3,77,000 ஏக்கர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.