நிதி அமைச்சரின் கார் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேர் முன்ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மதுரையை சேர்ந்த மணிகண்டன், கோகுல் அஜித், வேங்கை மாறன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஆகஸ்ட் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை டி.புதுப்பட்டியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் சென்றிருந்தார்கள். அப்போது தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் வந்தபோது கூட்டத்தில் இருந்து காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக பாஜகவின் மதுரை மாவட்ட துணை தலைவர் ஜெயவேல் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக எங்களையும் கைது செய்ய போவதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் எங்களுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால் மனுதாரர்களின் போராட்டம் விளம்பர நோக்கமாக உள்ளது..
முன்ஜாமின் கோரிய மூவர் மீதும் ஏற்கனவே குற்றவாளர்கள் நிலுவையில் உள்ளன. மனுதாரர்கள் தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தையும், அரசு பிரதிநிதியையும் அவமானப்படுத்தி உள்ளதாகவும் அன்றைய தினம் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டது. இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த நபரின் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் நடந்த இந்த சம்பவத்தை அரசு சட்ட விரோதமானதாகவும், ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலாகவும் கருதுகிறது. ஆகவே மனுதாரர்களை காவல் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்தது. மனுதாரர் தரப்பில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் இல்ல.. எல்லாம் எதிர்பாராத விதமாக நடந்தது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கின் தீர்ப்புக்காக ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.