தங்க கட்டிகள் கடத்தல் கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே புடையூர் கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி ஊருக்கு திரும்பிய பாலையா தன்னுடைய மாமியார் ராணியிடம் ஒரு பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னுடைய நண்பர்களான ஜெகன், உசேன், ஜாகீர், இப்ராஹீம், செல்வமணி, சாகுல் ஹமீது, விக்னேஷ் மற்றும் சின்னராசு ஆகியவுடன் சேர்ந்து பாலையா வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடம் பெட்டிக் குறித்து விசாரணை செய்துள்ளார்.
அதற்கு முத்துலட்சுமி தன்னுடைய கணவர் கடந்த சில நாட்களாகவே வீட்டிற்கு வரவில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு பாலையாவிடம் தாங்கள் ஒரு பெட்டியை கொடுத்து விட்டோம் எனவும், அந்த பெட்டி எங்களுக்கு வேண்டும் எனவும் குமரேசன் கேட்டுள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி தன்னுடைய தாயிடம் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு பெட்டி குறித்து கேட்டுள்ளார். அப்போது ராணி பெட்டி தன்னிடம் இருப்பதாக கூறியதை அடுத்து குமரேசன் மற்றும் அவருடைய நண்பர்கள் ராணி வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி பெட்டியை பறித்து விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி வேப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது குமரேசன் தான் துபாயில் மீன்பிடித் தொழில் செய்து வந்ததாகவும், எனக்கு போதிய வருமானம் இல்லாததால் குறைந்த விலைக்கு துபாயிலிருந்து தங்கத்தை வாங்கி அதை தமிழகத்தில் விற்பனை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன்பிறகு எனக்கு பாலையா என்பவரின் பழக்கம் ஏற்பட்டதால், நான் தங்கக் கட்டிகளை வாங்கி அவரிடம் கொடுத்து என்னுடைய நண்பர்களிடம் கொடுக்குமாறு கூறினேன். ஆனால் பாலையா என்னுடைய நண்பர்களிடம் தங்க கட்டிகளை கொடுக்காமல் அவர்களை ஏமாற்றி எடுத்து சென்று விட்டார் என்று கூறியுள்ளார். இவர் பாலையாவிடம் 100 கிராம் மதிப்புள்ள 3 தங்க கட்டிகளை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலையாவை கைது செய்ததோடு, வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.