டெல்லி சட்டபேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பொறுப்பை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் தந்து விட்டதா..? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆம்ஆத்மீ கட்சி டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதை பாராட்டி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில் தமிழகம், கேரளா, தெலுங்கானா என பல மாநில மக்கள் டெல்லியில் வசிக்கும் நிலையில், அவர்களும் பாரதிய ஜனதா கட்சியை நிராகரித்து விட்டதாக சிதம்பரம் பதிவிட்டு இருந்தார்.
டெல்லி என்பது மினி இந்தியா என்பதால் அங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி என்பது தேசிய அளவில் ஏற்பட்ட தோல்வியாகவே பார்ப்பதாக சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி கண்டனம் தெரிவித்து ட்வீட்டரில் பதிவிட்டு உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்திருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை கொண்டாடுவது ஏன் என்றும், இப்படியே பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பொறுப்பை மாநில கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு,
நாம் கட்சி பணிகளை நிறுத்தி கொள்ளலாமா எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சனம் செய்திருக்கிறார்.