பெற்ற தாயை கொல்ல முயற்சி செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி என்றும் மகனும், கோகிலா என்ற மகளும் இருக்கின்றனர். இவருடைய மூத்த மகன் கோவிந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் கோபிக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருக்கும் நிலையில், கோகிலாவுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என அவருடைய தாயார் கூறியுள்ளார். இதன் காரணமாக கோபிக்கும் அவருடைய தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோபியின் தாயார் கோகிலாவின் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனையடுத்து சித்ரா சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் சென்ற கோபி அவரை வழிமறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோபி தன்னுடைய தாயின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.