சீனாவின் உளவு கப்பலால் இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5 இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை சென்றடைந்தது. இந்த கப்பல் வருகிற 22-ஆம் தேதி வரை துறைமுகத்தில் நிற்கும். இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடக் கூடாது என இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 22 மீட்டர் நீளமும் 26 மீட்டர் அகலமும் கொண்ட கப்பலில், 11 ஆயிரம் டன் வரை பொருட்களை வைக்கலாம். இந்த கப்பலில் ராக்கெட்டுகள் ஏவும் வசதி, விண்வெளி கண்காணிப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பு போன்ற பிரம்மாண்டமான வசதிகளும் இருக்கிறது. இந்த கப்பலால் 750 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள செய்திகளை மிக துல்லியமாக சேகரிக்க முடியும்.
இது சீனாவில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக உளவு கப்பல் சேகரிக்கும் அனைத்து தகவல்களும் உடனடியாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று விடும். மேலும் தமிழகத்தில் இருந்து அம்பந்தோட்டா துறைமுகம் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாலும், உளவு கப்பலால் 750 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள தகவல்களை துல்லியமாக சேகரிக்க முடியும் என்பதால்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவின் உளவு காப்பல் இந்திய எல்லையை நெருங்கி வந்தது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இந்த கப்பல் இலங்கையில் நிற்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.