நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரி உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் 1862 ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 160 வது ஆண்டு நினைவை போற்றும் விதமாக சிறப்பு தபால் தலையை தலைமை நீதிபதி வெளியிட அதனை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக் கொண்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய நான்கு டிரைவர்களுக்கு தலைமை நீதிபதி தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடனும் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.