சட்டவிரோதமாக மண் அள்ளிய 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து விவசாயிகள் களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் சிலர் களிமண்ணை அனுமதி பெறாமல் அள்ளி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த ஏரிக்கரையில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு சிலர் மண் அள்ளி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர்கள் லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அந்த வாலிபர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் 3 லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி உரிமையாளர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.