பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் என் குப்பை என் பொறுப்பு என்னும் திட்டத்தின் கீழ் விளம்பர பலகைகள் நோட்டீசுகளை அகற்ற கால ஆவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று காலை முதல் கோவை ரோடு மகாலிங்கபுரம் நேதாஜி ரோடு உடுமலை ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் இருந்த விளம்பர பலகைகள் நீக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் பானுமூர்த்தி போன்றோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது நகர அமைப்பு ஆய்வாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்துள்ளனர்.
இது பற்றி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் படி என் குப்பை என் பொறுப்பு என்பதை வலியுறுத்தி பல்வேறு தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், தட்டிகள், பாதைகள், நோட்டீசுகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன்படி சாலையோரங்களில் உள்ள பழுதடைந்த உபயோகம் அற்ற உரிமை கோராமல் உள்ள வாகனங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொள்ளாச்சி நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள நகராட்சிக்கு பொதுமக்கள் வணிக நிறுவனத்தினர் ஓத்துழைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.