உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான்ருஷ்டி (75) மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்கநாட்டின் நியூயார்க் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் திடீரென்று ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியிருக்கிறார். இதனால் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இதற்கிடையில் சல்மான் மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடிமடர் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சல்மான் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலையில், பிரபல எழுத்தாளர் ஜேகே ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஹரிபாட்டர் கதையை எழுதி பிரபலமானவர் ஜேகே ரவ்லிங். இவர் சல்மான்ருஷ்டி மீதான தாக்குதல் பற்றி இரங்கல் தெரிவித்து தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து ஜேகே ரவ்லிங் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல் நிலை சரியில்லாதது போன்று உணருகிறேன். அவர் நலமாக இருக்கட்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் ஜேகே ரவ்லிங் டுவிட்டர் பதிவுக்கு கீழே கருத்து பதிவிடும் இடத்தில், மீர்ஆசிப் அஜீஸ் எனும் பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், கவலைப்பட வேண்டாம், அடுத்து நீங்கள் தான் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜேகே ரவ்லிங்கிற்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.