சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் அமைச்சர் மா.சு கலந்து கொண்டார்.
சென்னையில் உள்ள தீவு திடலில் சிங்கார உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த உணவுத் திருவிழா இன்று தொடங்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் துவக்க விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது அமைச்சர் மா.சு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் சிங்காரச் சென்னை என்ற தலைப்பில் உணவு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார். இங்கு உடலுக்கு பாதிப்பு ஏற்படாத சத்தான உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 150 உணவுகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழாவில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் காட்சிப்படுத்தப்பட வில்லை.
இந்த உணவு திருவிழாவின் மூலம் மக்களுக்கு சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இந்த விழாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உணவுகளை சுவைத்து மகிழ்கின்றனர். உணவுப் பொருட்களில் ஒட்டப்பட்டுள்ள லேபில்களை பார்த்து தெரிந்த பிறகு உணவுப் பொருட்களை வாங்குதல், சூடான உணவுகளை பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யும் நடவடிக்கைகளை ஒழித்தல், உப்பின் அளவு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் பொதுமக்களிடம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதால், அரசாங்கமே ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த எண்ணையை மறுசுழற்சி செய்து பயோடீசல் ஆக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1 வருடத்தில் பெரிய நிறுவனங்களிடமிருந்து 23.33 லட்சம் லிட்டர் எண்ணெய் வாங்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நிகழ்ச்சிகளில் மீதம் வரும் உணவுகளை வாங்கி பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய தமிழகமானது உணவு தர நிர்ணயத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்றார். இதனையடுத்து அமைச்சரிடம் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணிகளுக்கு ஸ்டால் இருக்கும்போது எதற்காக பீஃப் பிரியாணிக்கு மட்டும் ஸ்டால் வழங்கப்படவில்லை என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பீஃப் பிரியாணி ஸ்டால் அமைப்பதற்கு எங்களிடம் அனுமதி கேட்டு இருந்தால் கண்டிப்பாக வழங்கப்பட்டிருக்கும். நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன். உணவு என்பது தனிமனித உரிமை என்றார். மேலும் கடை உரிமையாளர்கள் எங்களிடம் அனுமதி கேட்டு இருந்தால் கண்டிப்பாக நாங்கள் அனுமதி வழங்கியிருப்போம் என்றார்.