மதுரையில் விடுதியில் தங்கி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றன. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவிகளின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று தேர்வு என்பதால் காலையில் விடுதியில் முதல் மாடிக்கு சென்று படித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த வார்டன் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாணவியை மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.