கடந்த 2013ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவர் சிவகங்கை பீலமேடு கிராமம் பகுதியில் கீழேடு கிராமத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு கூலி வேலைக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரின் மொபைல் எண்ணை தெரிந்து கொண்டு உள்ளார் பச்சைமுத்து.
இதையடுத்துக் கூலி வேலையை நிறுத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு சென்ற அவர் தொடர்ந்து செல்போன் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பச்சைமுத்து கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழ்நிலையில் நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து தற்கொலைக்கு தூண்டிய பச்சைமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.