மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. மேலும் 18 முதல் 40 வயதுடைய எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதையடுத்து வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் எளிதாக இதில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில், கணக்குத்தாரர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குகின்றனர். இது ஒரு அரசாங்க திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும். மேலும் , கணக்குத்தாரர் வயதை பொறுத்தே இந்த திட்டத்தில் முதலீடு செய்வது தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில், மத்திய நிதி அமைச்சகம் தற்போது திடீரென புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் சேருவதற்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட கெசட் அறிவிப்பின் படி, வருமான வரிச் சட்டத்தின் படி வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் அக்டோபர் 1, 2022 முதல் அடல் பென்ஷன் யோஜனாவில் சேரத் தகுதி பெற மாட்டார்கள்.
மேலும் இந்த புதிய விதியின்படி, அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்திருந்தால், புதிய விதி அமலுக்கு வரும் தேதியில் அல்லது அதற்கு முன் வருமான வரி செலுத்துபவர் எனக் கண்டறியப்பட்டால், அவருடைய கணக்கு உடனடியாக மூடப்படும். அதுவரை டெபாசிட் செய்யப்பட்ட ஓய்வூதியத் தொகை திரும்ப அளிக்கப்படும்.