திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி மனுக்களை அளித்தனர்.
சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருப்பத்தூர் வேடியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் தனது மகன் மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த சமயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார்.
அப்போது, கணவனை இழந்து நானும், தந்தையை இழந்து எனது மகனும் மகளும் தவிக்கும் இந்த சூழ்நிலையில் எங்களை வெளியே தள்ளி நாங்கள் குடியிருக்கும் வீட்டை இடித்து சொத்தை எங்களது மைத்துனர்கள் அபகரித்துக் கொண்டார்கள்.
எங்களுக்கு வாழ வழியே இல்லை என்று கூறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றனர் . இதை கண்டதும் அங்குள்ள அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி மேலே தண்ணீரை ஊற்றி விசாரித்தனர். பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.