கடந்த காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. ஏனென்றால் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை பார்த்து பெற்றோர்கள் மாணவர்களை அங்கு சேர்க்கின்றனர். அதாவது தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பூங்கா, கணினி, மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள் உள்ளிட்ட வசதிகளால் மாணவர்கள் ஆர்வத்தோடு செல்கின்றனர். எனவே தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளையும் மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்து சிகரம் தொடு என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இதுவரை பல்வேறு இடங்களில் 7 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அவற்றை ஸ்மார்ட் வகுப்பறை கொண்ட பள்ளிகளாக மாற்றி இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 8 வது பள்ளியாக திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பாலப்பன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியை ரூ.7 லட்சம் வரை செலவு செய்து ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட பள்ளியாக வசதிகள் செய்து கிராம மக்களுக்கு அர்ப்பணித்து உள்ளனர்.
இந்த தொடக்கப்பள்ளியில் சுவர்களில் அழகிய வண்ணம் கோலங்களால் பெயிண்ட் அடித்து, பள்ளி கழிவறைகளுக்கு டைல்ஸ் பதித்து, அலங்கார வளைவுயுடன் நுழைவு வாயில், காம்பவுண்ட் சுவர்களில் பொன்மொழிகள் கணினி மற்றும் அகன்ற திரை வசதி, மாணவர்கள் அமர நாற்காலி, ஷூ, சாக்ஸ், பிரேயர் கூட்டம் நடக்க ஆடியோ சிஸ்டம், சிசிடிவி என்று பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியது பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் பள்ளிகள் பல்வேறு வசதிகளை காட்டி கிராமப்புறம் மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வரும் நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அமைப்பாக ஒன்றிணைந்து அரசு பள்ளிகளை மேம்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.