75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு சென்னை முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட நாளை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அவரவர் வீடுகளில் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி படிக்கும், பணிபுரியும் மக்கள் பலரும் இன்று தங்கள் சொந்த ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகி வரும் நிலையில் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் பலமுறை எச்சரித்தும் ஒவ்வொரு பண்டிகை தினத்தின்போது இது தொடர்கதை ஆகி வருகின்றது. இதனால் ஊருக்கு செல்லும் மக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.