டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 40வது உயர்ந்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “துணை ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்ட நிலையில் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே உடனடியாக வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்.
இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகம். குஜராத், ஹரியான, பீகார், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வயது வரம்பு 45 ஆக உள்ளது. ஆந்திர மாநிலத்தில் 47, தெலுங்கானாவில் 49, கேரளாவில் 53 வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் வயது வரம்பை உயர்த்த மறுத்து வருவது சரியில்லை. எனவே தமிழகத்திலும் அரசு தேர்வு எழுதுபவர்களின் வயது வரம்பை உயர்த்த வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.